Friday, September 21, 2012

இயற்கை உணவு உண்டால்...300 வயது வாழ முடியும்..!

A very good article about food - so much so that Im pasting it completely here.

http://news.vikatan.com/index.php?nid=10232#cmt241

----


சென்னை அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள குறுக்கு சந்துக்கு பெயர் துரைசாமி ராஜா தெரு. அங்குள்ள ஏ.வி.ஜி ரெட்டி இயற்கை நல  மருத்துவமனையில் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயற்கை மருத்துவ முகாம் நடப்பதாக கேள்விப்பட்டோம்.

என்னதான் நடக்கிறது என்று பார்க்க நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். நமக்கு முன்பு நாற்பது பேர் அங்கே ஆஜராகி இருந்தார்கள். ஒரு பக்கம் வாழைப்பழத் தார் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் முளைக்கட்டிய பயறுகள், பேரீச்சம் பழம், திராட்சை  போன்றவை வைத்திருந்தார்கள். அந்த இடமே விநோதமாக காட்சியளித்தது.

சுவையான தாமரை டீ, தேநீர் இடைவேளையில் வந்தது. மதிய உணவில் வெஜிடபிள் பிரியாணி, பாயசம் என்று வகை வகையான உணவுகளை பரிமாறுகிறார்கள். அத்தனையும் அடுப்பில் வேக வைக்காத இயற்கை உணவுகள் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். இதை விட இன்னும் பயனுள்ள தகவல்கள் முகாமில் பகிர்ந்து கொண்டார்கள்.
முதலில் இயற்கை உணவு நிபுணர் ஏ.வி.ஜி. ரெட்டி பாடம் நடத்த தொடங்கினார்.

Dr.A.V.G.Reddy" ஒரு நடுத்தர மனிதனின் இதயம் ஒரு நாளில் சுமார் ஒரு லட்சம் தடவை துடிக்கின்றது. 23 ஆயிரம் தடவை சுவாசிக்கின்றது. இவ்வளவு அற்புதங்களடங்கிய இந்த மனித இயந்திரத்திற்கு எரிபொருளாக பஞ்ச பூதங்கள் நிறைந்த உயிருள்ள இயற்கை உணவுகளைத் தர வேண்டும். அப்படியில்லாவிட்டால் (சமைத்த உணவுகளையே கொடுத்தால்) ஒவ்வொரு தலைமுறைக்கும் குறைந்தது ஒரு சதவிகிதம் ஆரோக்கியம் மனிதனுடைய விந்துவில் குறைந்து கொண்டே வந்து நூறாவது தலைமுறையில் நூறு சதவிகித ஆரோக்கியமும் இல்லை என்றாகி விடும்.
அதாவது, இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகள் வரை சமைத்த உணவுகளையே உண்டு உயிர் வாழ்ந்து கொண்டு வந்தால், முடிவில் பருவத்திற்கு வரும்வரை கூட மனிதன் உயிருடன் வாழ முடியாமல் மனித இனமே அழிந்து விடலாம்.

அப்படியென்றால் புலி, சிங்கம் போன்ற விலங்குகள் மாமிச உணவினால் உயிர் வாழ்கின்றனவே எப்படி? என்று நீங்கள் நினைக்கலாம். அவற்றின் உடலமைப்பு பச்சை மாமிசங்களை ஜீரணிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அவற்றின் சிறுநீரகங்கள் மனிதனுடையதை விட நான்கு மடங்கு பெரியது. அவற்றின் உமிழ்நீர் முழுவதும் மாமிசத்தை ஜீரணிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அவைகூட புல் , இலை, தழைகளைச் சாப்பிடும் முயல், மான், மாடு போன்ற உயிரினங்களையே விரும்பிச் சாப்பிடுகின்றன.

புலி, சிங்கங்களுக்குக் கூட சமைத்த மாமிசங்களை மட்டுமே உணவாகக் கொடுத்தால் அவற்றின் இயல்பான ஆயுட்காலம் வரை உயிர் வாழ முடிவதில்லை. சமைக்காத மாமிசங்களில் பஞ்ச பூதங்கள் நிரம்பியிருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கொடூரமான குணங்களையுடைய புலி, சிங்கங்களை மனிதன் தனக்கு அடிமையாக்க முடியாததின் முக்கியமான ஒரு காரணம் அது உண்ணும் மாமிச உணவே. அவற்றிற்கும் தேங்காய், பழங்களைக் கொடுத்தால் மனிதனுக்கு அடிமையாகி விடும்" என்றவர், அடுத்த சொன்ன விஷயம் நம்மை மேலும் சிந்திக்க வைத்தது.

"பிறந்த முயல்குட்டி மூன்று மாதத்தில் பருவத்திற்கு வந்து குட்டி போட ஆரம்பித்து விடுகின்றது. அதனுடைய ஆயுள் 60 மாதம். பிறந்த ஒரு ஆட்டுக்குட்டி அரை வருடத்தில் வயதுக்கு வந்து குட்டி போட ஆரம்பிக்கின்றது. ஆடுகள் சுமார் 10 ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு பசுமாட்டின் கன்று பிறந்து ஒரு வருடத்தில் பருவம் எய்தி கன்று போட ஆரம்பிக்கின்றது. பசுமாட்டின் ஆயுள் சுமார் 20 வருடங்கள். இந்த மாதிரி 15 வயதில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராகும் ஒரு மனித இனமும் (அதைப் போல 20 மடங்கு 20 x 15 = 300) சுமார் முந்நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும்.

பழங்கால மனிதன் சுமார் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாக பைபிள் உள்ளிட்ட பல புத்தகங்கள் மூலம் தெரிய வருகின்றது. மனிதனின் ஆயுள் 300 ஆண்டு. அந்த மனிதன் ஒரு நாள் மட்டும் சமைத்த உணவு சாப்பிட்டால் அந்த மனிதனின் ஆயுளில் ஒரு நாள் குறையும். எனவே வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதன் 150 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடிவதில்லை.

சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்காமையால் மேலும் அவனுடைய ஆயுள் குறைகின்றது. புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் ஆயுளை அதிகமாகக் குறைக்கின்றது. இப்படிப்பட்ட பல காரணங்களினால் மனிதனுடைய ஆயுள் இன்று நூற்றுக்கு கீழே வந்து விட்டது.

மனிதன் தனக்குத் தேவையான சரியான உணவுகளைச் சாப்பிடாமல் ஆரோக்கியத்தை அழிக்கும் விஷங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதினால் தான் நோயாளியாகின்றான். எனவே உணவு முறைகளை மாற்றியவுடன் நோய்கள் எல்லாமே நீங்கிவிடும். உதாரணமாக, நாம் காய்கறிகள் வாங்க கடைக்குப் போகிறோம்... அங்கு கீரைகளோ அவரைக்காய், பீன்ஸ் முதலியவையோ அதிகமாக வாடியிருந்தால் அவற்றை நாம் வாங்குகின்றோமா? வாடியிருக்கும் அந்தக் காய்கறிகளில் சத்துகள் செத்துப் போயிருக்கும் என்று தானே வாங்க மறுக்கிறோம். அப்படியானால் அவற்றை நாம் அடுப்பில் வேக வைத்து சமைத்துச் சாக வைத்துச் சாப்பிடும் பொழுது அவற்றின் சத்துகள் அழிந்து விடும், குறைந்து விடும் என்று ஒரு நொடியாவது நாம் சிந்தித்திருக்கின்றோமா?" என்று இடைவெளிவிட்டு நிறுத்தினார் ஏ.வி.ரெட்டி.
Rathna Sakthivelஅடுத்து பேச வந்தார்... இயற்கை உணவு தயாரிப்பில் நிபுணரான ரத்தின சக்திவேல்.

"சமைக்காத உணவுகளில் தான் மனிதனுக்குத் தேவையான எல்லா உயிர்ச் சத்துகளும், வைட்டமின்களும், இயற்கையாகவே அமைந்துள்ளன. அவைகள் உணவுகளை ஜீரணிப்பதற்கு மிகவும் உதவி செய்கின்றன. எனவே சமைக்காத காய்கறிகளையும், பழங்களையும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் ஒரே மணி நேரத்தில் ஜீரணமாகி இரத்தத்துடன் கலந்து விடும். அதற்குப் பிறகு பசி தோன்றினாலும் தண்ணீர் மட்டும் அருந்தினால் போதுமானது.
சாப்பிட்டால் பசி எடுக்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டு வயிற்றை நிரப்புகின்றோம். அவற்றில் ஜீரணத்திற்கு உதவி செய்யும் சுரப்பிகளும், வைட்டமின்களும், தாதுப் பொருள்களும் இல்லாமையால் சமைத்த உணவுகள் ஜீரணம் ஆக குறைந்தது 4 மணி நேரம் ஆகின்றது.

சமைக்காத இயற்கை உணவுகளைச் சாப்பிட பழகிக் கொள்வது எப்படி? தங்களுக்குரிய சந்தேகம் இது தானே?

ஒரு சர்க்கரை வியாதி நோயாளி சர்க்கரை போடாத காபியைக் காசு கொடுத்து வாங்கி விரும்பிச் சாப்பிடுகின்றான். வேப்பிலையை தினமும் சாப்பிட்டு வருபவனுக்கு அது கசப்பதில்லை. கசக்கும் வேப்பிலையை ருசிக்கும் அவனுக்கு மற்ற உணவுகள் தேவாமிர்தமாக இருக்கின்றன.

ஒரு வெள்ளரிக்காயைச் சமைக்காமல் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கிறது. இது இயற்கை ருசி. இதில் உடலுக்குத் தேவையான உப்புச் சத்துகள் இயற்கையாகவே அடங்கியுள்ளன. அதே வெள்ளரிக்காயை வேகவைத்து ஒன்றும் கலக்காமல் சாப்பிட்டுப் பார்த்தால் துப்பி விடுகின்றோம். காரணம் உப்பு இல்லை. உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கேற்ப இந்த சமைத்த உணவுகளான உப்பில்லாப் பண்டங்களைக் குப்பையிலே போடாமல், அதனுடன் செயற்கையாக நாமே உப்பு சேர்த்து விடுகின்றோம். அதிகமாக இருக்கும் உப்பை சிறுநீரகம் வெளியேற்றுகிறது. ஒரே ஒரு நாள் சிறுநீரகம் வேலை செய்யாவிட்டால் மனிதன் உயிரோடு வாழ முடியுமா?

காடுகளில் மிகவும் ஆரோக்கியமாக வாழும் மான், குதிரை, யானை முதலியன உப்பு போட்டு சாப்பிடுவதில்லை. அவை கூன், குருடு, செவிடு போன்ற ஊனமுள்ள குட்டிகளைப் போடுவதில்லை. செயற்கை உப்பு அதிகமாகச் சேருவதால் தான் மனிதன் நோயாளியாகி மலட்டுத் தன்மை அடைகிறான். செயற்கை உப்பு கலவாத இயற்கை உணவுகளை மட்டும் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்ட உடனேயே 15 வருடங்களாக குணமடையாத பல நோயாளிகள் குணமடைந்திருக்கின்றார்கள்.

சமைக்காத இயற்கை உணவுகளான, முளைவிட்ட தானியங்கள் முளைவிட்ட பயிறு வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், தேங்காய் முதலின காரத் தன்மையுள்ள உணவுகள் ஆகும். சமைத்த உணவுகள், தானியங்கள், பயிறு வகைகள், பால், முட்டை, மாமிச உணவுகள் முதலியன அமிலத்தன்மையுள்ள உணவுகள் ஆகும். மிகவும் புளிப்புச் சுவையுள்ள பழங்கள் அமிலத்தன்மையின. பசிக்காத பொழுது எந்த உணவு சாப்பிட்டாலும் அது அமிலத்தன்மையுள்ள உணவாக மாறிவிடும். ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்து புளிக்கும் சுவையுள்ள நெல்லிக்காய் சாப்பிட்டாலும் அது இனிக்கும். அப்போது நமது உமிழ் நீர்ச்சுரப்பிகள் அமிலத் தன்மையுள்ள பழங்களைக் கூட காரத்தன்மையுள்ள உணவாக மாற்றி விடுகின்றன.

அரிசி, பருப்பு முதலியவற்றை மாவாக அரைத்து வைத்தால் ஒரு நாளில் புளித்து விடுகின்றதல்லவா? இந்த மாதிரி புளிக்கின்ற மாவுப் பொருள்கள் நிரம்பியுள்ள எல்லா உணவுப் பொருள்களும் பொதுவாக அமிலத்தன்மையுள்ள உணவுகள் ஆகும். மனிதன் நூற்றுக்கு நூறு காரத்தன்மையுள்ள உணவுகளையே உண்டு உயிர் வாழ முடியும் அப்படியிருந்தால் அந்த மனிதனுக்குச் சோர்வு, களைப்பு, தலைவலி, வயிற்றுவலி என்றால் என்ன வென்றே தெரியாது. அவனைப் பாம்புக் கடித்தாலும் சாகமாட்டான். எந்த நோய்க் கிருமிகளைச் சாப்பிட்டாலும் உடல் நலம் குறையாது" என்றார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்று சொல்லி வைத்த வாசகம் காதில் ஒலித்தது. இன்று உள்ள அத்தனை நோய்க்கும் நாம் உண்ணும் உணவுதான் முக்கிய காரணம் என்ற விஷயம் பிடிபட தெருவில் இறங்கி நடக்க தொடங்கினோம்...!