Sunday, December 22, 2013

அறிவு | Arivu

அறிவு என்றால் நிறையக் கற்பது என்றும் நிறையக் கற்றவர்களை அறிஞர் என்றும் அழைக்கின்ற தவறான பழக்கம் நம்மிடையே வந்தது எப்போதிருந்து தெரியவில்லை. ஆனால் அந்தக் கேடு நம்மைச் சூழ்ந்துள்ளது.

வள்ளுவப் பேராசானைப் பெற்ற தமிழர்கள் எப்படி இந்தத் தவறுகட்கு ஆட்பட்டார்கள் எந்த் தெரியவில்லை.

அவர் எது அறிவு என்று நமக்குத் தெளிவாகச் சொல்லிச் சென்றிருக் கின்றார்.

ஆமாம் அடுத்த உயிர்கள் படும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி அந்த உயிரின் துன்பத்தைத் துடைக்க முயற்சி செய்வது அறிவு என்கின்றார். வெறுமனே படித்தவர்கள் எத்தனை பேர் இந்தக் குணம் கொண்டவர்களாக உள்ளனர். இல்லையே.

மற்றவர்கட்கு எளிதாகப் புரியும்படி நல்லவைகளை பண்புகளை உயர் குணங்களைச் சொல்லுவது அறிவு என்கின்றார். அது போல தன்னிடம் பேசுபவர்களின் பேச்சிலிருந்து சிறந்த பொருட்களைக் காண்பதுவும் அறிவு என்கின்றார்.

அஞ்ச வேண்டிய உயிர்க் குலத்திற்கு எதிரான பண்பற்ற செயல்
களைச் செய்ய அஞ்சுவது அறிவு. எந்தச் சூழலிலும் வாய்மைக்குப் புறம்பான செய்லகளைச் செய்யாமல் இருப்பது தான் அறிவு என்கின்றார்.

நமக்குத் தீமையையே செய்து மகிழ்கின்ற தீயவர்களுக்கும் கூட
மறந்தும் எந்தத் தீமையையும் செய்யாது தன்னைக் காத்துக் கொள்வது அறிவு என்கின்றார்.அறிவிலேயே தலையாயது அது என்கின்றார்.

இப்படி நற்பண்புகளைக் கொண்டு ஒழுகுபவர்கள் தான் அறிவுடையார் என்கின்றார்.அவர்களுடைய அறிவு எந்த நேரத்திலும் அவர்களைக் காக்கும். எவராலும் அழிக்க முடியாத கோட்டையைப் போல் அந்த அறிவு காக்கும் என்கின்றார்.

உணர்ந்து அதன் வழி நடப்போம்.

குறட்பாக்கள்

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக்கடை

எண் பொருவாகச்செலச் சொல்லி தான் பிறர் வாய்
நுண் பொருள் காண்பது அறிவு

அறிவினுள் எல்லாம் தலை எனப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண்

Source: NellaiKannan
Url: https://www.facebook.com/thamizhkadalnellaikannan/posts/241959109313484






No comments:

Post a Comment